சென்னை,

த்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அருண்ஜேட்லி தாக்கல் செய்த  மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்தவித புதிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. சாதாரண மக்களுக்கு பயன்படும்படியாக இந்த  பட்ஜெட் அமையவில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன் அடையும் பட்ஜெட்டாக இல்லை.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பண பிரச்சினைக்கு இந்த பட்ஜெட்டில் புதிதாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன.

பணம் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் வருமானம் எந்தவிதத்திலும் உயரவில்லை. பொருளாதாரமும் வளர்ச்சி அடையவில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் இன்னும் 2 வருடம் வரை தொடரும்.

அரசு மக்களுக்காக செயல்பட வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த நாடு ஜனநாயக நாடாக விளங்கும். ஆனால் இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. நம் நாட்டில் ஏழைகள் மற்றும் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் தான் 50 சதவீதம் உள்ளனர்.

நாட்டின் உற்பத்தி குறித்து பட்ஜெட்டில் சொல்லும்படி இல்லை. முதலீடு மற்றும் உற்பத்தி கடந்த ஒரு ஆண்டில் குறைந்து உள்ளது. மக்களின் நேரடி வரியை மட்டுமே குறைத்துள்ளது. மறைமுக மாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. விவசாயத்திற்கு ஒதுக்கிய நிதி குறைவு. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 200 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது வேதனைக்குரியது.

நரேந்திர மோடி பதவி ஏற்றபோது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று கூறினார்.

2015-2016ம் ஆண்டு 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார். 2016-2017ம் ஆண்டு 77 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை வழங்கினார். அந்த 77 ஆயிரம் பேர்களில் 50 ஆயிரம் பேர் அரசு வேலை பெற்றவர்கள்.

இந்த பட்ஜெட்டிலும் வேலைவாய்ப்பு, சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. விவசாயத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் போதாது.

இவ்வாறு அவர் பேசினார்.