டில்லி

த்திய அமைச்சர் சிதம்பரத்தைப் பொய்யான விசாரணைக்காக மத்திய அமைப்புக்கள் நீண்ட நாட்கள் காவலில் வைக்க விரும்புவதாக அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் மீது ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் ஈட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.  அதையொட்டி சிபிஐ  அவரைக் கைது செய்தது.  அவருடைய ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.  அவரை அக்டோபர் 24 முதல் திகார் சிறையில் அடைக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.

திகார் சிறையில் அவருக்கு மேற்கத்தியக் கழிப்பறை,  வீட்டில் சமைத்த உணவு, மருந்துகள், மற்றும் தனிச் சிறை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு உதவி செய்ததாக அவருடைய மகனும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், “இந்த விசாரணை ஒரு பொய்யானது.    மத்திய அமைப்புக்களின் ஒரே நோக்கம் எனது தந்தை ப சிதம்பரத்தை வெகு நாட்கள் காவலில் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே ஆகும்.   அவர்களின்  விருப்பத்தை நிறைவேற்ற 74 வயதான எனது தந்தை மிது தவறான குற்றம் சாட்டி உள்ளனர்.

அதற்கு ஆதாரமாக அமலாக்கத்துறை ஒரு சில போலிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவன விவரங்களை நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.  நானும் எனது தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவோம்.  எங்கள் சொத்துக்கள் அனைத்தும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்படி உள்ளது” எனக் கூறினார்.