டில்லி

நாடெங்கும் கொரோனா ப்ரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது.  அது இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி உள்ளது.  இதுவரை மூன்று அலை பரவல் நடந்துள்ளது.   கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.  குறிப்பாக இரண்டாம் அலையை விட மூன்றாம் அலையில் பாதிப்பு விரைவில் குறைந்துள்ளது.

இதையொட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் கூட்டம் டில்லியில் நடந்தது.  அப்போது அவர்கள் கொரோனா மூன்றாம் அலை இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்களின் உழைப்பால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள்,” கொரோனா தடுப்பூசி வேகமாக அனைவருக்கும் போடும்படி செய்ததால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைந்துள்ளன.  மேலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பள்ளிகள்,கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கலாம்.   அதே வேளையில் மிகவும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்” எனக் கூறி உள்ளனர்.