டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்தமுறையிலான ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு, கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்தியஅரசு, ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு கால ஒப்பந்த முறையில், ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்கு  எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால், மத்தியஅரசு அறிவிப்பை வாபஸ் பெற முடியாது என்று அறிவித்துள்ளடன், வன்முறையில் ஈடுபடுவோர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில்,  அக்னிபாத்  திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அக்னிபாத்  திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கூறி உள்ளார். அதுபோல மற்றொரு பொதுநல வழக்கில், அக்னிபாத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு  தலைமை நீதிபதியின் பரிந்துரையின் படி விரைவில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் மத்தியஅரசின் கருத்தை கேட்காமல் அக்னிபாத் திட்டத்தில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.