டில்லி

நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.   இந்த கூட்டத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உரையாற்றினார்.  அவர் தனது உரையில், ”மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சி மொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை வழங்கினார்.

சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறியுள்ளார். உள்துறை அமைச்சரின் கடிதங்கள் இந்தி  பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியில் மட்டுமே வருகின்றன.

இந்த நடவடிக்கை ஒரு அடக்குமுறை ஆகும்.  மத்திய அரசு இந்தி  பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றது.  மத்திய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை.

இதனால் இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த திட்டங்களுக்காக, மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டும் அந்தத் திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

இவ்வாறு மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

மாநில அரசுகளின் அனைத்து அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம்.  சமீபத்தில் பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி உள்ளது.  ஆகவே அரசியலமைப்புச் சட்டத்தில் உரியத் திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், மத்திய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திமுக நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார். அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன.  இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது”. என தெரிவித்துள்ளார்.