டில்லி
மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆனால் மூன்றாம் அலை பரவல் விரைவில் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. அதிகமான பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ள நிலையில், 2-வது டோஸ் பெற்றிருப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
எனவே 2-வது டோஸ் பயனாளிகளுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை நாடு முழுவதும் இதுவரை 71.24 கோடி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதால் 76% பேர் பலன் பெற்றுள்ளனர்.
சுமார் 30.06 கோடி பேர் அதாவது 32 சதவீதம் பேர் மட்டுமே 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆகவே மாநிலங்கள் முதல் டோஸ் போட்டு இடைவெளி காலம் முடிந்த பயனாளிகளுக்கு 2-வது டோஸ் போடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்டம் வாரியாக பயனாளிகளைக் கணக்கெடுத்து 2-வது டோஸ் போட வேண்டிய பயனாளிகளை அடையாளம் கண்டறியலாம்’ எனக் கூறியுள்ளது.