பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு என வலியுறுத்தினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றார்.அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் கருவாக “ஒன்றாக மீட்போம், வலுவாக மீட்போம்” என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய அளவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்கள் பேச உள்ளனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.
கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் பேரழிவுகளை ஏற்படுத்தியது. அப்போதைய் உலகத் தலைவர்கள் அமைதிக்கு திரும்புதலுக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இப்போது இது நமது நேரம். நமக்கான வாய்ப்பு. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது. ஏனெனில் இந்தியா இப்போது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது. ஆகையால் இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதைத் தடுக்கும், எரிசக்தி ஸ்திரத்தன்மையை அசைக்கும் எவ்வித தடைகளையும் ஊக்குவிக்கக் கூடாது.
2030ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிபொருள், எரிசக்திகளுக்கு தேவையான நிதி, தொழில்நுட்பங்களை வழங்க ஜி20 உச்சி மாநாடு நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறியதுடன், ‘ உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எரிபொருள் வினியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் ஊக்குவிக்க கூடாது.’ எனவும் தனது ஜி20 மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவு வதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த தருணத்தின் தேவை. அடுத்த ஆண்டு புத்தரும், காந்தியும் பிறந்த மண்ணில் நாம் அனைவரும் ஜி20 மாநாட்டிற்காக கூடும்போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்துவோம் என்று நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக வெளியுறவு செயலர் அரிந்தம் பாக்சி பகிர்ந்த டடிவீட்டில், பிரதமர் மோடி ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர், உணவு, உரம், எரிசக்தி ஆகியனவற்றின் வழங்கல் சங்கிலி தடையற்றதாக இருப்பதன் அவசியத்தையும், தெற்கு உலகின் மேம்பாட்டிற்கு அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் என கூறியுள்ளார்.