ஈரானில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஆதரவளித்து ஈரான் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை ஒழுங்காக அணியவில்லை என்று அந்நாட்டு கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் காவலில் இருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டதால் செப்டம்பர் 16 ம் தேதி மரணமடைந்தார்.

இந்த மரணத்தை தொடர்ந்து ஈரான் கடந்த பல ஆண்டுகளில் கண்டிராத ஒரு மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது. நாடு தழுவிய அளவில் ஆர்பாட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

அயதுல்லா அலி கமேனியின் தலைமையில் ஈரானின் இஸ்லாமிய அரசாங்கம் விதித்துள்ள விதிகளை மீறி, பெண் எதிர்ப்பாளர்கள் தங்கள் ஹிஜாப்களை எரித்தும், பொது இடங்களில் தலைமுடியை வெட்டியும் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி 227 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனுப்பினர்.

இதனை ஏற்று கிளர்ச்சியாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் முடிவை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது. மொத்தமுள்ள 290 உறுப்பினர்களில் 227 பேர் இதற்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த போராட்டம் தொர்பாக இதுவரை சுமார் 15000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வைத்தே முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது சிறையில் உள்ளவர்களில் எத்தனை பேர் தூக்கிலடப்படுவார்கள் என்பது தெரியாததால் ஈரானில் உச்சபட்ச பதற்றம் நிலவுவதோடு உலகநாடுகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது.