வாஷிங்டன்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என அறிவிப்பு வந்தது.  அதையொட்டி தடுப்பூசி போடாதவர்களும் முகக் கவசம் அணிவதை நிறுத்தி விட்டனர்.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

நேற்று வரை அமெரிக்காவில் 3.53 கோடிக்கும் மேல் பாதிக்கபட்டு 6.27 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2.96 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 51.56 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  தினசரி பாதிப்பிலும் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கத் தொற்று நோய் தடுப்பு மைய இயக்குநர் ராச்செல் வாலென்ஸ்கி, “தற்போது உலகெங்கும் மாறுபட்ட கொரோனா வைரஸ்களான டெல்டா உள்ளிட்டவற்றின் பரவல் அதிகமாக உள்ளது.  தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த பரவலை எந்த அளவுக்குத் தடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்.  தடுப்பூசி போட்டு கொண்டவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்றாலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.  ஆகவே அதை தடுக்கவாவது அவர்கள் கட்டாயம் வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அணிய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.