சாத்தான் குளம்

சாத்தான் குளம் பகுதியில் தந்தை மகன் மரணம் அடைந்த விவகாரத்தில் வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் இருவரும் உயிர் இழந்த விவகாரம் தமிழகத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது   இந்த மரணம் குறித்து தமிழக அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளது.  இந்நிலையில் தற்போது புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெனிக்ஸ் நடத்தி வரும் மொபைல் கடைக்கு அருகில் உள்ள கிங் எலக்டிரிகல்ச் என்னும் கடையில் பதிவாகி உள்ள இந்த சிசிடிவி காட்சி காவல்துறையினர் எஃப் ஐ ஆரில் அளித்த தகவலுக்கு நேர்மாறாக உள்ளது,  இந்த காட்சி இரவு 9.33 மணிக்குத் தொடங்குகிறது  இதில் பென்னிக்ஸ் கடை முன்பகுதி நன்கு தெரிகிறது.  இந்த வீடியோ காட்சி சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்களின் பதிவு எனக் கூறப்படுகிறது.

கடை முன்பு ஒரு வாகனம் வந்து நிற்பது பதிவாகி உள்ளது.   முகத்தைச் சுற்றி ஒரு டவலை முகக் கவசம் போல் சுற்றி இருந்த ஒரு போலீஸ்காரர் கடை முன்பு நின்றிருப்பவரிடம் ஏதோ பேசுகிறார்.  அதன் பிறகு போலீஸ்காரர் ஜீப்பை நோக்கிச் செல்கிறார்.   சிறிது நேரம் கழித்து மேலும் இரு காவலர்கள் பென்னிக்ஸ் கடை முன் வந்து அங்கு நின்றுக் கொண்டிருக்கும் ஜெயராஜ் உடன் பேசுகின்றனர்.   அப்போது வீடியோ பதிவில் நேரம் இரவு 9.43 எனக் காட்டுகிறது.

காவலர்கள் ஜெயராஜ் உடன் 2 நிமிடங்கள் பேசுகின்றனர்.  அப்போது அங்குப் பதட்டமோ எதிர்ப்போ எதுவும் நடக்கவில்லை.  காவலர்கள் தங்கள் வாகனத்துக்கு நடந்து செல்கின்றனர்.ஜெயராஜ் மீண்டும் பழையபடி நிற்க தொடங்குகிறார்.   ஒரு நிமிடம் கழித்துக் கடை வாசலில் நின்றுக் கொண்டிருக்கும்  ஜெயராஜ்  கரை நோக்கி நடந்து செல்கிறார்.  அப்போது அவரை காவலர்கள் அழைத்தனர் எனச் சாட்சிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்த சிசிடிவி பொருத்தப்பட்டிருந்த கடைக்காரர் அப்போது கடையை மூட தயார் ஆகிறார். சுமார் ஒன்றரை நிமிடம் கழித்து பென்னிக்ஸ் நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி அவசரமாகக் கடைக்குள் நுழைகிறார். (அவர் பென்னிக்ஸ் மற்றும் கடையில் உள்ள அவர் நண்பர்களிடம் ஜெயராஜை காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளதைச் சொல்லச் சென்றுள்ளார்).

உடனடியாக பென்னிக்ஸ் மற்றும் அவர் நண்பர் ராஜாராம் இருவரும் கடையை விட்டு வெளியே வந்து அந்த காவல்துறை வாகனத்தை நோக்கிச் சென்று ஏதோ பேசுகின்றனர்.  அதன்  பிறகு ஜெயராஜை அழைத்துக் கொண்டு காவல்துறை வாகனம் சென்று விட பென்னிக்ஸ் கடைக்கு வந்து தனது குடும்பத்தினரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு நண்பருடன் பைக்கில்  செல்கிறார்.

இந்த வீடியோ பதிவில் நேரம் இரவு 9 மணிக்குப்  பிறகு நடந்ததாக உள்ளன.  ஆனால் இந்த சிசிடிவி வைத்துள்ள கடைக்காரர் பிரபு இந்த சிசிடிவி நேரம் எப்போதும் ஒரு மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் அதிகமாக பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.  அதன்படி இந்த நிகழ்வுகள் இரவு 8 மணி வாக்கில் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ பதிவுகள் காவல்துறையின் எஃப் ஐ ஆரில் தெரிவிக்கப்பட்டதற்கு நேர் மாறாக உள்ளன. எஃப் ஐ ஆரில், “ஜூன் 19 ஆ,ம் தேதி இரவு 9.15 மணிக்கு ஒரு காவலர் வழக்கப்படி பென்னிக்ஸ் கடை இருந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.,  எபிஜே மொபைல் கடை ஊரடங்கு நேரத்துக்கு பிறகும் திறந்ததிருந்தது.  அது ஊரடங்கு விதிகள் மீறலாகும்.

கடை வாயிலில் பென்னிக்ஸ், ஜெயராஜ் மற்றும் சிலர் நின்றுக் கொண்டு இருந்தனர்.  அவர்களைக் கலைந்து போகச் சொன்னதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இந்த தந்தை மகன் இருவரும் கலைந்து போக மறுத்துத் தகாத வார்த்தைகளில் காவலர்களைத் திட்டி தரையில் உருண்டு புரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.” என பதியப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜூன் 19 அன்று இரவு தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் கொடுமை செய்யப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் காயங்களுடன் நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்  கடந்த 22 ஆம் தேதி இரவு பென்னிக்ஸ் மரணம் அடைந்துள்ளார்.  23 ஆம் தேதி  ஜெயராஜ் மரணம் அடைந்துள்ளார்.