கரூர்:

ரூர் நாடாளுமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா சரியாக  இயங்கவில்லை என கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் சிசிடிவி காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா இயங்கவில்லை என்று புகார் எழுந்தது.  இதனையடுத்து சம்பவ இடம் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘சிசி டிவி’ கேமரா சரியாக இயங்கவில்லை என, எங்கள் கட்சி முகவர்கள் தெரிவித்தனர்.  அதையடுத்து நேற்று இரவு, 11:40 மணிக்கு சென்று பார்த்த போது, ‘சிசி டிவி’ கேமரா, இரண்டு மணி நேரம் வேகமாக இயங்குவது தெரிய வந்தது. அதை சரி செய்யச் சொல்லி, தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் புகார் அனுப்பி உள்ளோம். மேலும்,  ‘சிசிடிவி’ கேமரா மூலம், பதிவான காட்சிகளை பார்க்க அனுமதி கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.