சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் வரும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்  என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சென்னையில் வலி நிவாரணிகள் என்ற பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தகங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  மேலும்,  சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  மற்றும் கல்லூரிகள்  மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போதைப்பொருள் மற்றம் சட்டவிரோத மருந்துகள்  பயன்பாட்டை தடுக்க, போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் போதைப்பொருட்கள்,  சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. அதேபோல், டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை “X “H”,”H1″ Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.