சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பது தொடர்பாக  அ.தி.மு.க.-தே.மு.தி.க. இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளை தற்போது தங்களிடம் இழுப்பதற்கு இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் தாமாகா உள்பட  சிறு, சிறு கட்சிகளை  இழுப்பதில் பாஜக வெற்றி கண்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் உள்பட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், பாமக, தேமுதிக கட்சிகளை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள், தேமுதிக தலைவர் பிரேமலதாவை  சந்தித்து பேசினார்.

தே.மு.தி.க.வுடனான கூட்டணியை  மார்ச் 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள். அன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான பார்த்த சாரதி, இளங்கோவன், அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் வட மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்களுக்கே  வேண்டும் என்று கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக  கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளை இரண்டு கட்சிகளுமே  கேட்பதால் எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்று தெரியாமல் அதிமுக தவித்து வருகிறது. கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள அதிமுக,  கடலூர் மற்றும் திருச்சியை கூடுதலாக ஒதுக்க தயாராக இருக்கிறதாம்.  தேமுதிகவில் மூத்த தலைவரான சுதீஷ்  உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுவதால் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்காமல் விட்டு விட தேமுதிக முடிவு செய்துள்ளதாம்.  அதேபோல மாநிலங்களவை சீட்  என்பதை தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் முடிவாக உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கு வதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில்  பா.ம.க. உள்பட மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.