டில்லி:
சிபிஎஸ்இ பிளஸ்2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கசிந்தது குறித்த ஆதாரங்கள் கிடைத்தும் சிபிஎஸ்இ அமைப்பு கண்டுகொள்ளாமல் இருந்தது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு கணித தேர்வு நடந்த மார்ச் 28 ம் தேதி நள்ளிரவு 1.40 மணியளவில் 12 வினாத்தாள் புகைப்படங்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட கேள்வித்தாள் புகைப்படங்கள் ஆகியவை இமெயில் மூலம் சிபிஎஸ்இக்கு வந்திருக்கிறது.
அதாவது, தேர்வு துவங்கிய 9 மணி நேரத்திற்கு முன்னர் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் சி.பி.எஸ்.இ. அமைப்பு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேள்வித்தாள் கசிவு தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், கேள்வித்தாளை வெளியிட்டவர்கள், இதனை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். . இதுனை வாங்கிய பெற்றோர்கள், அதனை நகல் எடுத்து தலா 5 ஆயிரம் ரூபாய்க்கு மற்றவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். டில்லியில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் கேள்வித்தாளை வாங்கியிருக்கிறார்கள்.
கேள்வித்தாள் கசிவு குறித்து, 10 வாட்ஸ் ஆப் குழுக்களை டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 60 பேர் இருக்கிறார்கள். மேலும் மாணவர்கள், தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் என 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் விசாரணை வளையத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.