கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணாக்கர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக பாடம் நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புதிய செயல்முறையில், மாணாக்கர்களுடைய பெற்றோர்களையும் ஈடுபடுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தலைவர் அனிதா கார்வால், அனைத்து சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால், மாணாக்கர்களின் கல்விக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. இதன்பொருட்டு ‘பள்ளி – வீடு’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக, மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தலாம். இத்திட்டத்தில், மாணாக்கர்களின் பெற்றோரையும் கட்டாயம் பங்கேற்கச் செய்ய வேண்டும். இது தொடர்பாக, பெற்றோரிடம், ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பாடம் நடத்துவது, மாணாக்கர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் 5 முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும். முதலாவதாக, தங்கள் குழந்தைகளின் தனித்திறமையை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பெற்றோருக்கான சிலவகையான கேள்விகளை ஆசிரியர்கள் வரையறுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.