கொல்கத்தா
மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை முடித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார்
கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் கொல்கத்தா வந்தனர். ராஜிவ் குமார் இல்ல வாசலில் மேற்கு வங்க காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யபட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் விடுவிக்கபட்டனர்.
ராஜிவ் குமார் இல்லத்துக்கு நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை எதிர்த்து திடீரென தர்ணா போராட்டத்தை தொடங்கினார். இது நாட்டில் கடும் பரபரபை ஏற்படுத்தியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மம்தா போராட்டத்தை தொடர்ந்தார். அத்துடன் சாலையிலேயே அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்வுகளையும் மம்தா நடத்தினார்.
அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ராஜிவ் குமார் இடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது, அவரை சிபிஐ கைது செய்யக்கூடாது என்னும் உத்தரவும் பிறப்பிக்கப் பட்டது. அதன் பிறகு எதிர்க் கட்சியினருடன் கலந்தாலோசித்த மம்தா பானர்ஜி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
மம்தா பானர்ஜி, “உச்சநீதிமன்றம் காவல் ஆணையர் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது என நியாமான தீர்ப்பை வழங்கி உள்ளது. நான் சிபிஐ விசாரணையை எதிர்க்கவில்லை. விசாரணை என்னும் பெயரில் மோடி அரசு எங்களை மிரட்டுவதை எதிர்க்கிறேன். மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகி குஜராத்துக்கு மீண்டும் செல்லட்டும்
பாஜகவில் இணைபவர்கள் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகிய எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்காது. மத்திய பாஜக அரசும் அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படும். சிபிஐ விசாரணை அவர்களை அணுகாது. இவை எல்லாம் பாஜக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை” என கூறி உள்ளார்.