புதுடெல்லி: சிபிஐ அமைப்பானது அரசிடமிருந்து போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார் முன்னாள் கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வினோத் ராய்.

தான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார் வினோத் ராய். சிபிஐ அமைப்பின் செயல்பாடுகள் தற்போதைய நிலையில் ஒரு கைப்பாவை போலவே தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தப் பார்வையை போக்க வேண்டிய பொறுப்பு அரசின் கைகளில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதன் மூலமாக மட்டுமே, தனது ஆட்சிகாலத்தில் இத்தகைய அமைப்புகள் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க முடியும் என்றுள்ளார்.

நாடாளுமன்ற செயற் கமிட்டிகள் அடிக்கடி கூடி விவாதித்து, அரசின் செயல்பாடுகளை கண்காணித்து, தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். சிபிஐ, பிஏசி, சிஏஜி போன்றவை சுதந்திரத்தன்மையுடன் செயல்படுவதன் மூலமாக மட்டுமே ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை காக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி கணக்கீட்டை சர்ச்சைக்குரிய முறையில் கையாண்டார் என்ற குற்றச்சாட்டு வினோத் ராய் மீது உண்டு என்பதும், அதற்கான சரியான பதில் அவரிடமிருந்து வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.