விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி என ராமதாஸ் தரப்பில் கடுமையாக விமர்சித்ததுடன், “அன்புமணி ராமதாஸ் இல்ல.. அன்புமணி மட்டும்தான்.. என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என்றும் கறாராக ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று சென்னை சென்னை ராஜரத்தினம் மைதானம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள கூட்டணி கட்சி உள்பட பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், எந்தவொரு கட்சியும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், பாமக மட்டுமே போராட்டத்தை நடத்தியது.
இதற்கிடையில், அன்புமணிக்கு போட்டியாக இன்று பாமக நிர்வாக குழு கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டினார். அதன்படி, , “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் டிசம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பாமகபெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
46 ஆண்டுகளாக 96,000 கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கிய இந்த கட்சியில் அன்புமணிக்கு உரிமை இல்லை.
அன்புமணிக்கு உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்ப மனு வாங்குவதாக ராமதாஸ் தரப்பு பாமக தீர்மானம் அளித்துள்ளது.
ஒட்டுக்கேட்பு கருவி வைத்து சொந்த அப்பனுக்கு ஆப்பு வைக்கத் துணிந்த அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி’ என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் அத்தனை அவலத்துக்கும் அவருக்கு தலையணை மந்திரம் ஓதியவர்களே பொறுப்பு. கட்சியும் பாமகவின் சின்னமும் எங்களிடம்தான் உள்ளது. என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 22 நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் “2026 தேர்தலுக்கு முன்பாக நடக்கும் நிர்வாகக் குழு கூட்டம் இது. இந்த கூட்டத்தில் 2026இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் எனக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை, சின்னமும் அவருக்கு கொடுக்கவில்லை எனக் கூறிவிட்டது. பாமக நிறுவனத் தலைவர் நான் தான் என உறுதி செய்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பு அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சி பெயரையோ, சின்னத்தையோ, என் பெயரையோ பயன்படுத்த கூடாது என தெரிவித்துவிட்டேன். இது குறித்து காவல்துறையிடம் புகாரும் கொடுத்துள்ளோம்.
அப்போதும் தொடர்ந்து என் பெயரையும், கட்சி பெயரை சட்டத்தை மீறி பயன்படுத்தி வருகிறார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்று கூட வேட்பு மனு வாங்குகிறார்கள். கட்சியே இல்லாமல் வேட்பு மனு வாங்குகிறோம் என பம்மாத்து வேலை எல்லாம் செய்கிறார்கள். இதனை பாமக வன்மையாக கண்டிக்கிறது. அவருக்கு எவ்வளவோ பதவிகளை கொடுத்து அழகு பார்த்தோம். நான் ஆலமரம் போல கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி வளர்த்த கட்சியை, அவர் நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு வெட்ட ஆரம்பித்துள்ளார்.
அதனால் அவருக்கு தான் நஷ்டம். இதனை அன்புமணி நிறுத்தி கொள்ள வேண்டும். கூட்டணி பேச எனக்கு நிர்வாகக் குழு அதிகாரம் கொடுத்துள்ளது. ஜனநாயக நெறிப்படி, முறைப்படி இந்த கட்சியை நடத்தி வருகிறோம். அன்புமணிக்கும், இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்த கட்சியை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அவருக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபரீத அரசியல் விளையாட்டு வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.