சென்னை,
இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனையை எடப்பாடி அணியினர் ஏற்பார்களா என கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் குறித்து தம்பிதுரை மற்றும் ஜெயக்குமார் போன்றோர் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனை, இரு அணியினரின் இணைப்புக்கான சாத்தியத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி,
அம்மாவின் ஆன்மா சாந்தி பெற வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ் தர்ம யுத்தத்தை தொடங்கினார்.
அதில், பிரதானமான கோரிக்கையாக ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.
இதன் அடிப்படையில்தான், நேற்று தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தான் ஓபிஎஸ் வரவேற்று, தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, நாங்கள் முதல்வர் பதவி கேட்கவில்லை, பொதுச்செயலாளர் பதவி கேட்க வில்லை என்றும், ஒன்றரை கோடி தொண்டர்க ளின் வேண்டுகோளுக்கு இணங்க அம்மா ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றுதான் கேட்டோம் என்றார்.
தினகரன் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் நடராஜன் உள்ளார். எங்களுக்கு முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவி வேண்டாம். தேவையில்லாத கருத்துக்களை கூறி, பேச்சுவார்த்தைக்கு அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றார்.
மேலும், பெரும்பான்மையான எம்எல்ஏ’க்கள் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவான நிலையிலேயே இருந்து வருகின்றனர். இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்தினால் ஓபிஎஸ் முதல்வர் ஆகிவிடு வாரோ என்று சசிகலா தரப்பினர் பயப்படுகின்றனர் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.