2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறு வருட விசாரணைக்குப் பிறகு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர் மீதான வழக்கை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
2014ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் தனது முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து 2017 ம் ஆண்டு எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் லிமிடெட் (ECL) நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் உமாங் கெஜ்ரிவால் மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
2004 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் அரசாங்கத்துடன் ECL நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அடுத்து 2006 ஆம் ஆண்டில், மாநில அரசு 192 ஹெக்டேர் பரப்பளவில் 55.79 ஹெக்டேர் காடுகளை வனமற்ற பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைக் கோரியது.
ECL நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்காக அனுமதிக்கப்பட்ட பகுதி சிங்பூம் யானைகள் சரணாலயத்தின் முக்கிய பகுதி என்றும், வனவிலங்கு பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும் கூறி, வன நிலத்தை திசை திருப்புவதற்கு ஒப்புதல் அளிக்கும் உச்ச அமைப்பான வனத்துறை ஆலோசனைக் குழு இதற்கான அனுமதியை இரண்டு முறை நிராகரித்த நிலையிலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று சிபிஐ குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
இதனை அடுத்து ஊழல் வழக்கில் இருந்து ஜெயந்தி நடராஜனை சிபிஐ விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.