ஷில்லாங்:
மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகளைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்யக்கூடாது என்றும், அதேசமயம், ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, மம்தா பானர்ஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சாரதா நிதி நிறுவன முறைகேடு குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம், மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக இன்றும் விசாரணை நடந்தது.
சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இதே வழக்கு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி குணால் கோஷிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.