சென்னை: 250 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வாங்கி கொடுக்க ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 6மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்பட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை குறித்து கார்த்தி டிவிட் வெளியிட்ட பதிவில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், இந்த சோதனை எதற்காக என்பது குறித்து சிபிஐ தரப்பல் தகவல் வெளியாகி உள்ளது. அதில், சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில், ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. 2010-14-ல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அளிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்து உள்ளது.
மேலும், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
மும்பையில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர். கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வீட்டில், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.