டில்லி:
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
காங்கிரஸ் தலைமயிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது, கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன் காரணமாக ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றது என சிபிஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் வழக்குகளை நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ, கடந்த 2011ம் ஆண்டு தாக்கல் செய்தது. அதையடுத்து நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்தஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட 14 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருந்தன.
இந்நிலையில், சிபிஐ சார்பில் டில்லி ஐகோர்ட்டில், 2ஜி வழக்கில் சிபிஐ கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.