கோவை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி யுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.பொள்ளாசி விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில், அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை விசாரணைக்கு அழைத்துள்ள சிபிசிஐடி.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், திருநாவுக்கரசிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் தொடர்பாக புகார் கொடுத்த இளம்பெண்ணின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜன், தென்றல் மணிமாறன் இருவரும், வரும் 28ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தென்றல் மணிமாறன் என்பவர், கோவை மாவட்ட திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜின் மகன் ஆவர். பார் நாகராஜன் பொள்ளாச்சி நகர அம்மா பேரவை செயலாளர்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த பலர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது 2 பேரை சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.