சென்னை
கடந்த மாதம் 6 ஆம் தேதி ரயிலில் ரு. 4 கோடிபண பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த மாதம் 6 ஆம் தேதி பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தாம்பரம் காவல்துரையினர் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழக பா.ஜனதா துணைத்தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தன்பேரில் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
கடந்த 26 ஆம் தேதிஇந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் தாம்பரம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
தற்போது, ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் கோவர்த்தனின் வீடு, ஓட்டலில் சிபிசிஐடி காவலர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நீடித்து வருகிறது. மேலும் இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது