டில்லி:
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பில், காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.
இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கூறியிருப்பதாவது,
தஞ்சை விவசாயிகள் சங்கம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், தீரப்பு தஞ்சை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது , நீதிமன்றம் எங்களை வஞ்சித்துவிட்டது என்றும் கூறி உள்ளனர். மேலும், ஒவ்வொரு முறை விசாரணையின்போதும், காவிரி நீரை குறைத்துக் கொண்டே வருவது ஏற்கத்தக்கதல்ல, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகா நீரைத் தந்துவிடப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ள விவசாய சங்கம், காவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்து உள்ளது.
காவிரி உரிமை குழு தலைவர் மணியரசன்:
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு விரோதமாக கூடுதலாக பாசன பகுதிகளை அதிகரித்துக்கொண்டது கர்நாடகா என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணிப்பதாக மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் ராமதாஸ்:
தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வை அணுக முடியுமா? என்பதற்காக சட்டப்படியான சாத்தியக் கூறுகளையும் தமிழக அரசு ஆராய வேண்டும் என்றும் ராமதாஸ் வற்புறுத்தி உள்ளார்.
மதிமுக தலைவர் வைகோ:
காவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ள வைகோ, தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு மோடி அரசு உள்ளது என்றும், காவிரி வழக்கில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கூறியுள்ள தமிழிசை, தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் , தமிழகத்திற்கான பங்கை குறைக்கும் உத்தரவை தமிழக பாஜக வரவேற்கவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கான பங்கு கிடைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்துள்ள 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:
தீர்ப்பு தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட அநீதியாகும்.
இத்தீர்ப்பிற்கு பின்னர் யாரும் மேல் முறையீட்டிற்கு செல்ல முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு எதிராக ஒரு நிலைப் பாடாகும். ஏனென்றால் தமிழகம்தான் மேல் முறையீடு செய்வதற்கான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் மத்திய அரசு அவ்வாறு செய்யுமா, என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக நலனை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ளது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதை வரவேற்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி:
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைந்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது அளிக்க உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:
தமிழகத்தில் காவிரி நீரை படிப்படியாக குறைத்து இப்போது மேலும் 15 டி.எம்.சி. நீரை குறைத்து இருப்பது தமிழக மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் 20 அடி இருப்பதாக காரணம் காட்டி குறைத்து இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் நிரந்தரமல்ல. மழையின் அளவை பொறுத்து மாறும். காவிரி பிரச்சினையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைப்பு தமிழகத்துக்கு பின்னடைவு தான்.
இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
‘நதிகள் தேசியச் சொத்து’ என்ற அடிப்படையில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 14.75 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகாவுக்குக் கூடுதலாகத் தர வேண்டும் என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன்
கூறுகையில், “தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீரை நம்பாமல் மாற்று வழி விவசாயம் எப்படி என்பது குறித்து சிந்திக்க வைத்து விட்டார்கள். மூன்று போகம் விளைச்சல் என்பது இனி கானல் நிராகிவிட்டது. அரிசிக்குப் பதிலாக கோது மையை அதிகமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறைமுகமாக நமக்கு உணர்த்தியுள்ளது”
மார்க்சிஸ்ட் கட்சி:
காவிரி நதீநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும் , அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்துவைக்கத் தமிழக அரசு தவறிவிட்டதன் காரணமாகவே தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக வந்துள்ளது என்று பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
காங். முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி:
காவிரி வழக்கில் வெளியான தீர்ப்பு நியாயமானது அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். காவிரி தீர்ப்பை ஏற்பது தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்:
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பாதிக்கும், தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது என்றும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.