சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்-
அதன்படி, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள், மரக்காணத் தில் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன்.நேரு, பொன்முடி, சக்கரபாணி தெரிவித்தனர்.
“காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது”, என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய அன்றே 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், அதற்கு மறுநாளான 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும், கேள்வி நேரம் தொடங்கியது அப்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து, கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் அடுத்த தலைமுறைக்கானது, விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன், நதிநீர் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டம். மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டால் உபரி நீர் கடலில் கலக்கிறது என்று சட்டப்பேரவையில் சி.விஜயபாஸ்கர் கூறினார். காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்துக்கு முதலில் அடித்தளம் இட்டவர் கலைஞர்தான். முன்னுரிமை அடிப்படையில் காவிரி-வைகை-குண்டாறு இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
திருச்செங்கோடு உறுப்பினர் ஈஸ்வரன், “கழிவு நீரால் மாசுபட்டுள்ள காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ தீட்டப்பட்டது. மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்புடன் தீட்டப்பட்ட இந்த திட்டத்தில்,மாநில அரசின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுகையில், ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ காவிரி மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகளான, திருமணிமுத்தாறு, தரபங்கா, அமராவதி, பவானி மற்றும் நொய்யல் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல்,புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தினை இரண்டு கட்டங்களாக, கட்டம் ஒன்று காவிரி ஆறு மேட்டூரில் இருந்து திருச்சி வரையிலும், மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகள்.இரண்டாவது கட்டம் திருச்சியில் இருந்து கடல் முகத்துவாரம் வரை எனவும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
கட்டம் ஒன்று மொத்த திட்ட மதிப்பீடு ரூ.934.30 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம். அதாவது ரூ.560.58 கோடி. மாநில அரசின் பங்கு 40 சதவீதம். அதாவது ரூ.321.72 கோடி. இதற்கான நிதியினைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, பெரம்பலூர் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா என அந்த பகுதி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன், கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என உறுதி அளித்தார்.
. ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது. சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படுவதால் நீர்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார் .
பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஏரிகளை தூர்வாரி நடைபாதை அமைக்க வேண்டும் என ஜி.கே.மணி கோரிக்கை வைத்தார். இதற்குபதில் கூறிய அமைச்சர் நேரு, தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியதுடன், ஏரியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற தாமதம் ஆகும். ஆட்சியர் மூலம் மாற்றிடம் ஒதுக்கிய பிறகுதான் ஏரியை மேம்படுத்த முடியும் என கூறினார்.
மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் பொன்ஐ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், . விழுப்புரம் மாவட்டத்தில் 5 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் நெல்களை பாதுகாப்புடன் கொள்முதல் செய்ய கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நடப்பாண்டில் கூடுதலாக 425 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 7 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மெகா கொள்முதல் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 200 டன் நெல் கொள்முதல்” செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.