டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. காவிரி நீர் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கே உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசின் காவிரி வரைவு திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்சநீதி மன்றம், இந்த அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவின் கோரிக்கைகளை ஏற்கவும் மறுத்துவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை இந்த பருவத்திற்குள்ளேயே அமைக்க வேண்டும் என்றும், நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வினியோகிக்கப்படும் நீர் வெளி யேற்றப்படுவது குறித்து தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் காவிரி மேலாண்மை வாரியம் அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் காவிரியில் நீர்வரத்து விவரத்தை ஆணையத்திடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. நீர் இருப்பு விவரத்தை கூற கர்நாடகம் தெரிவித்த மறுப்பை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை
ஆனால், அணைகளை மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கையையும் ஏற்றது உச்சநீதிமன்றம்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்றும், .காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும், வரைவுத் திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.