சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்  நடை பெற்று வரும் நிலையில் பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல்  போராட்டம் நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கடந்தசில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று 4-வது நாளாக தி.மு.க.வின் மறியல் போராட்டம் நீடித்தது.

சென்னை ஆலந்தூரில் மா.சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வினர் மற்றும் அதன் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல, சென்னை கொரட்டூர் மற்றும் திருவொற்றியூர் ரெயில் நிலையங்களில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.