சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் , திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி  கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொல்.திருமாவளவன்:-
thiru
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் போது கர்நாடக மாநில அரசு எப்படி உச்சநீதிமன்றத்தை மதிக்கும்.
மத்திய அரசின் வழக்கறிஞர், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அமைக்கப்படும் என்றும் விவாதித்து இருப்பதாக தெரிகிறது. இது அரசியல் உள் நோக்கம் கொண்ட நிலைப்பாடாகும்.
மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.
 கி.வீரமணி :-
veeru
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது மத்திய அரசால், நாடாளுமன்றத்தால் அரசியல் சட்டப்படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, மத்திய அரசினால் கெசட் செய்யப்பட்ட ஒன்று. தற்போதைக்கு அது இயலாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியது அசாதாரணமானது.
மத்திய அரசு இதனை ஏற்க இப்போது மறுப்பதன்மூலம், அரசியல் சட்டத்தின் கடமைகளைச் செய்யத் தவறும் ‘‘முதல் குற்றத்தை’’ அதுவே செய்ததாகாதா? இது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் விரோதமான போக்கு அல்லவா? தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைக்கும் பச்சை துரோகம் ஆகும்.
மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் அது வேலியே பயிரை மேயும் படு மோசமான, வன்மையான கண்டனத்திற்குரிய போக்காகும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.