சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  அதாவது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரின் அளவு 53 டி.எம்.சி ஆகும். இதில் தற்போது வரை 15 டி.எம்.சி மட்டுமே கர்நாடகா அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. ஆனால்,  அவர்கள் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வரை சந்தித்து சுமூகமாக பேசி, தண்ணீர் திறக்க முயற்சி செய்யலாம். ஆனால், அதை செய்யாமல், மத்தியஅரசு தலையிட வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று  தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்றது ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது.

இந்த நிலையில், தற்போது காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் விநாடிக்கு 5,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,385 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 55.79 அடியாகவும், நீர்இருப்பு21.65 டிஎம்சியாகவும் உள்ளது.