கடலூர்:

காவிரி பிரச்சினையில் திமுக என்ன செய்தது என்பதை நிரூபித்தால் ஒருபக்க மீசையை எடுக்கத் தயார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர், காவிரி பிரச்சினை குறித்து பேசினார். அப்போது, திமுக செயல் தலைவர் குறித்து ஒருமையில் பேசிய அமைச்சர், 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த திமுக காவிரிக்காக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

காவிரி பிரச்சினையில்  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உச்சநீதி மன்றம் சென்று காவிரி நீர் தமிழகத்திற்கு வர வழி வகை செய்தார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதும், காவிரிக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறினார்.

17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், 6 வார காலம் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், 42 நாள் பொறுக்க முடியாத ஸ்டாலின், 17 ஆண்டுகாலம் மத்திய அரசில் இருந்தாயே தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தாய் என்றும்,  காவிரி நடுவர் மன்றம் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று சரமாரியாக கேள்வி விடுத்தார்.

காவிரி பிரச்சினையில் திமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும், அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து,  ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்துக்கொள்வர்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.