டெல்லி:
தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகா அரசோ சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே உள்ளது என கூறி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. மீண்டும் உத்தரவு இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, கர்நாடகாவின் நடவடிக்கையை நீதிபதிகள் கண்டித்தனர். அத்துடன் தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகா உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் அனைத்துகட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம் என சொல்லி காலம் தாழ்த்தியே வந்தது. காவிரி கண்காணிப்பு குழு கொடுத்த தீர்ப்பையும் மதிக்கவில்லை.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் கர்நாடகாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் முன்னிலையில் இரண்டு மாநிலங்களும் பேசி முடிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் டெல்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட தமிழகத்துக்கு திறந்துவிடவில்லை.
இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது கர்நாடகாவை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர்,

தமிழகத்துக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டனர்.
அப்போது மேலும் நீதிபதிகள் கூறியதாவது: இந்த உத்தரவுதான் இறுதியானது… இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தியாக வேண்டும் என்று கண்டிப்புடன் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், நீங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும்….இருந்தாலும் உங்களுக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என்றும் நீதிபதிகள் மீண்டும் மீண்டு எச்சரித்தனர்.
Patrikai.com official YouTube Channel