டில்லி,

காவிரி வழக்கில் இன்றைய விசாரணையின்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில நீர் மேலாண்மை நிபுணர்கள் ஆஜராக  வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவர்களின் வாதங்கள் விஞ்ஞானப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற  விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அமர்வு, இவை அனைத்திற்கும் சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த மாதம் 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறது. இன்று 13வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், பருவ மழை மூலமாக கர்நாடகாவுக்கு 61 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதாகவும், ஆனால் தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

காவிரி படுகைகள் தமிழகத்தில் குறைவாக இருந்தாலும், மக்கள் தொகை தமிழகத்தில் தான் அதிகமாக இருப்பதாக வும் கூறினார. மேலும் கர்நாடகா அரசு கேட்கும் 465 டிஎம்சி தண்ணீர் கொடுத்தால், தமிழகத்திற்கு கொஞ்சம் கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, விசாரணையில்  குறுக்கிட்ட நீதிபதிகள்  தமிழகம் தண்ணீர் சேமித்து வைக்க மேட்டூர் அணை போல ஏன் வேறு அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று  சரமாரி கேள்விகணைகளை தொடுத்தனர்.

மேலும்,  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் வல்லுநர் குழுவை அழைத்து வரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர்.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா நீர் மேலாண்ம நிபுணர்கள் ஆஜராக வேண்டும் எனவும்,  ஒவ்வொரு நிபுணருக்கும் வாதங்களை முன்வைக்க 45 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும், அவர்களின் வாதம்  அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும் நீதிபதிகள் கூறினர்.

காவிரி பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.