சென்னை,
கடலூரில் மக்கள் நலக்கூட்டணியினிர் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இரண்டு நாள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. அதையடுத்து அனைத்து கட்சிகளும் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் கடலூரில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
10.40 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக அவர்கள் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
பாதி வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ரெயில் மறியல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் அதை மீறி அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேகமாக ரெயில் நிலையத்தை நோக்கி சென்றனர்.
ரெயில் நிலையம் அருகே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன.
அதன்முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெயில் நிலையத்தை நோக்கி வந்தவர்களிடம் இதைதாண்டி ரெயிலை மறிக்க நீங்கள் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.
இதனால் போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் 4 புறமும் சிதறி ஓடினர்.
அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் சட்டை கிழிந்தது.
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குளோப் காயமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற மக்கள் நலக்கூட்டணியினர் கைது செய்யப்பட்டனர்
ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கியன், இந்திய கம்யூனிஸ்டு முன்னால் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கோவை ரெயில் நிலையம் சென்று மறியல் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.