சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை சென்ட்ரலில் ரெயில் மறியல் செய்த வைகோ மற்றும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
vaiko-2
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெரம்பூரில் மு.க.ஸ்டாலினும், பேசின் பிரிட்ஜில் தொல்.திருமாவளவனும் ரயில் மறியல் செய்து கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, மக்கள் நலக்கூட்டணித் தலைவர் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது, காவல்துறை அதிகாரிகளுக்கும், வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வைகோ முழக்கங்கள் எழுப்பினார். அப்போது, மறியலில் பங்கேற்றவர்களும் முழக்கங்களை எழுப்பினர்.
vaiko9
போராட்டத்தின்போது,  செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.