சென்னை :
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


உச்சநீதி மன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட சொல்லி நேற்று அதிரடி தீர்ப்பளித்தை அடுத்து கர்நாடகாவில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் உள்ள கர்நாடக அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பளிக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாண்டியாவில் சாலைகளில் டயர்கள் எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்தினர். உச்சநீதிமன்றம் அநீதி இழைத்துவிட்டதாக கர்நாடக மாண்டியா விவசாயிகள் குமுறல், சாலைகளில் அணி அணியாக திரண்டு தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கண்டன்க்குரல் எழுப்பினர்.
கர்நாடக போராட்டம் காலணமாக தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டது. சத்தியமங்கலம்: தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் அரசுப் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மைசூரு, பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக அரசு வாகனங்களும் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
தமிழக அரசு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள கர்நாடக அரசு வங்கிகள் , தொழில் நிறுவனங்கள், உடுப்பி ஹோட்டல்கள் , அய்யங்கார் பேக்கரிகளூக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel