திருப்பதி:

திருப்பதியில் தமிழக பக்தர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஞ்சிபுரம் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் திருமலைக்கு சென்றனர்.

அலிபிரி சோதனைச் சாவடியில் கன்னியப்பன் என்பவரிடம் புகைபொருளை தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். அதை பாதுகாப்பு ஊழியர்கள் குப்பையில் வீச முயன்றபோது, அதை கன்னியப்பன் எடுக்க முயன்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸார் கன்னியப்பனை தாக்கினர்.

தடுக்க முயன்ற உறவினர்களையும் போலீஸார் தாக்கினர். இதில் கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

உதவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்திரா கூறும்போது, போலீஸாரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

பக்தர்கள் விதியை மீறி இருந்தாலும், அவர்களை தண்டிக்க போலீஸாருக்கு உரிமை இல்லை என்றார்.