என்னதான் பெரியார் மண்..! பகுத்தறிவு மண்..! என்று பலர் கூறிக்கொண்டாலும், சாதிய ஒடுக்குமுறைகளும் சாதிய வன்முறைகளும் இந்த மாநிலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளன.
மதுரை மேற்கில் அமைந்த காயம்பட்டி கிராமத்தில் இந்த சாதிய அநீதி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்கு ஒரு உயர் தண்ணீர் தொட்டி உள்ளது.
தொட்டியின் ஒரு வால்வு, அக்கிராமத்தின் உயர்ந்த சாதிகள் என்று சொல்லப்படும் நாடார், கள்ளர் மற்றும் செட்டியார் இன மக்களுக்கு தண்ணீர் வழங்குவதாகும். மற்றொரு வால்வு அக்கிராமத்தில் வாழும் 90 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கானது.
ஆனால், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக தங்களுக்கு தண்ணீர் தரக்கூடிய வால்வை குறிப்பிட்ட நேரத்திற்கெல்லாம் பூட்டிவிடுகிறார்கள் அந்த பிறசாதி மக்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இதன்மூலம் தாங்கள் பெறக்கூடிய தண்ணீரின் அளவை திட்டமிட்டே அவர்கள் குறைக்கிறார்கள்.
அதேசமயம், அவர்கள் மட்டும் தங்களுக்கு தேவையான தண்ணீரை அளவின்றி பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவதால், வேலைக்கு செல்லும் எங்கள் மக்களால் தங்களுக்குப் போதுமான தண்ணீரைப் பிடித்து சேகரித்து வைத்துகொள்ள முடியவில்லை. எனவே, நாங்கள் தண்ணீருக்கு அல்லாட வேண்டியுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இதுபோன்ற உளவியல் விஷமத்தனங்களுக்கு என்றுதான விடிவு வருமோ? என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் சாதி எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள்.