நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த சிஸ்கோ நிறுவனம் ஜாதியப் பாகுபாட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளதையடுத்து, எச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான ‘எச்சிஎல் அமெரிக்கா’ என்ற நிறுவனமும் தற்போது சாதியப் பாகுபாட்டுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
அங்கு பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு பணியாளர், சாதிய அடிப்படையில் தனது உயர் அதிகாரியால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர், கலிஃபோர்னியாவிலுள்ள மேல்மட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கப்பு நாயுடு பிரிவைச் சேர்ந்த தன்னை, கம்மா நாயுடுப் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் சக்கரவர்த்தி சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டி தண்டித்தார் என்று தான் தொடுத்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்டவர்.
ஆந்திராவில், கப்பு மற்றும் கம்மாக்கள் இடையே பல பிரச்சினைகள் உண்டு. கப்புகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பான மோதல்கள் சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.