டில்லி:

டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வின்போது, உடல்தகுதி தேர்வுக்கு கலந்து கொண்டவர்களின் மார்பில் ஜாதிய முத்திரை எழுதப்பட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.  இளைஞர்களின் இதயத்தில் ஜாதிய முத்திரையை பாஜக குத்தியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அதுதொடர்பான படத்துடன் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., என அவரவர் ஜாதிப் பிரிவுகளை எழுதியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை மீறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டுள்ளது. இளைஞர்களின் மார்பில் அவர்களது ஜாதிப்பிரிவை எழுதும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது.

அரசுப் பணிக்காக வந்தவர்களின் உடலில் ஜாதி முத்திரையைப் பதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்தச் செயல் மூலம் அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தனது ஜாதியவாதக் கொள்கையை தேசத்தின் இதயத்திலும், இளைஞர்களின் இதயத்திலும்  எழுதுகிறது.

இப்படி ஒரு முத்திரையை அனைவரிடத்திலும் பதிக்க வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணம்.

இவைதான் முன்பு தலித்துகளை கோயிலில் அனுமதிக்காமல் இருந்தது. அவர்கள் உடலில் துடைப்பத்தைக் கட்டி அவமானப்படுத்தியது போன்ற செயல்களாக இருந்தன. இப்போது ஜாதியக் கொடுமைக்கு புது வடிவம் கொடுக்கிறார்கள் 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.