கடலூர்: கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை ஜாதி பாகுபாடு காரணமாக, தரையில் அமரவைத்து அவமரியாதை செய்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இங்கு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, ஊராட்சி தலைவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தரையில் அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி ஊராட்சி துணை தலைவர், அவரை கீழே அமர சொல்லியுள்ளார். இதை மற்ற உறுப்பினர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இதுதொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திமுகவை சேர்ந்தவர் என்றும், மக்கள் பணியாற்றும் ஒவ்வொரு விஷயத்திலும் அவரது மோகன்ராஜின் தலையீடு இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. தற்போது மோகன் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.