டில்லி:

பணமதிப்பிழப்புக்கு பின் இ.வர்த்தகம் மீண்டும் ரொக்க பரிவர்த்தனையில் முந்தையை நிலையை அடைந்துள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த அறிவிப்பு வெளியாகி தற்போது ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது இ.வர்த்தகம் எனப்படும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

அமேசான், பிலிப்கார்ட், இ காம் உள்பட பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. மக்களிடமும் இதற்கான ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த இ.வர்த்தகத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பணமதிப்பிழப்புக்கு பின் அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது பணமதிப்பிழப்புக்கு முன் எந்த அளவில் ரொக்க பரிவர்த்தனை நடந்ததோ அந்த அளவை தற்போது இ.வர்த்தகம் மீண்டும் எட்டியுள்ளது. ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களை டெலிவரி செய்யும் போது ரொக்கம் கொடுக்கும் வழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தகம் 14.5-15 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இந்தியாவில் 60 முதல் 65 சதவீதம் வரையிலான வர்த்தகம் ரொக்கத்துடன் நடந்து வந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் இது 45 முதல் 55 சதவீதமாக குறைந்தது.

ரொக்கத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. தற்போது ரொக்க புழக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இ.வர்த்தகமும் முந்தைய நிலையான 60 முதல் 65 சதவீதம் வரையிலான ரொக்க வர்த்தகத்தை எட்டியுள்ளது.

பணமதிப்பிழப்பு தோல்வி அடைந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால் டிஜிட்டல் பரிவர்த்தனையும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.