பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக, அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டி ருந்த நோயாளிகளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

பாட்னாவில் இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில், 36 அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புற நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்,  பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதற்கு மருத்துவர்களின்  அலட்சியம்  காரணம் எனக் கூறி பலியானவரின் உறவினர்கள் மருத்துவரை தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவர்களுக்கும், இறந்த நோயாளியின் உறவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, நோயாளியின் உறவினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார்  500-க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும். அதுவரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை” எனக் கூறியுள்ளனர்.

இதனால், மருத்துவமனையில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்களே சிகிச்சை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 13 நோயாளிகள் சிகிச்சையின்றி இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அம்மாநில சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே அழைப்பு விடுத்துள்ளார்.