சென்னை,

த்திய அரசு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்து உள்ளார்.

மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆக. 5ந்தேதி  சென்னையிலும், ஆக.7ல் மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. உத்தரவிட்;டுள்ளது. அத்துடன் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூபாய் 4 உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மானிய விலையில் சிலிண்டரை பயன்படுத்தி வருகிற 18.11 கோடி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக இதை கருத வேண்டியிருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் 110 டாலராக இருந்தது தற்போது 60 டாலருக்கு கீழே சரிந்துள்ளது. அதேபோல, மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.6 ஆக இருந்தது தற்போது ரூபாய் 17.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியமைந்து இதுவரை சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கலால் வரியை 13 முறை உயர்த்தியுள்ளது.

இன்று உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலனை அனுபவிக்க சில விதிமுறைகளை மாநில அரசு வகுத்திருக்கிறது.

இதன்படி வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்ப வர்கள், மத்திய – மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றுவோர், 4 சக்கர வாகனம் வைத்திருப்போர், குளிர்சாதன கருவி வைத்திருப்பவர்கள், கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒதுக்கி புறக்கணிக்கிற வகையில் நரேந்திர மோடி அரசு விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

இந்த அரசாணையின்படி மாதம் ரூபாய் 8,334 சம்பளம் வாங்கினால் பயனாளிகளாக இருக்க முடியாது. இதன்படி தினக் கூலிகளாக வேலை செய்பவர்கள் உட்பட பெரும்பாலனவர்கள்உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயன்களை பெற முடியாத வகையில் விதிமுறைகள் திணிக்கப்பட்டி ருக்கிறது. இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவதைவிட மக்களை கொடுமைப்படுத்துகிற நடவடிக்கை வேறு இருக்க முடியாது.

எனவே, பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தீவிர பிரச்சாரம் செய்து உண்மையை உணர்த்த வேண்டியது நமது கடமையாகும்.மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டிருக்கிற அரசாணை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஆணையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. இத்தகைய மக்கள் விரோத மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. ஜான்சிராணி தலைமை வகிக்கிறார். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. கராத்தே ஆர். தியாகராஜன், திரு. சிவராஜசேகரன், திரு. எம்.எஸ். திரவியம், திரு. வீரபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நான் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து கண்டன பேரூரை ஆற்றுகிறேன்.

மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவிகள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், பிரிவுகளின் தலைவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்;டத்தினை வெற்றிகரமாக நடத்திட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்புடன் கேட்;டுக் கொள்கிறேன்.

சென்னையில் 5 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், பிரிவுகள் மற்றும் துறைளின் தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் – இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவிகள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.