மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான பல்வேறு சமூகப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், சீர்மரபினர், முற்பட்ட சாதிகள் என பல நூறு சாதிகள் உள்ளன. இந்த சாதிகளை வைத்துதான் தமிழ்நாடு அரசியல் நடைபெற்று வருகிறது.
சாதி சமயமற்ற சமுத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என கூறும் அரசும், சாதிய ரீதியிலாகவே செயல்பட்டு வருகிறது. சாதிகள் இல்லையடி பாப்பா…பாரதியார் பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் தமிழ்நாடு அரசும், தங்களது அரசியல் வெற்றிக்காக சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையையே ஆதரித்து வருகிறது. இதன்மூலம் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சீர்மரபினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் தகுதி இருந்தும், தங்களால் அரசு பணிகளில் சேர முடியாத நிலை இருப்பதாக மற்ற சாதியினர்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சாதிய கட்சிகளுக்கு தடை கோரி பொதுநல வழக்கு தொக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு என சாதியக்கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சியினருடன் இணைத்துக் கொள்வது, இளைஞர்கள் யூடியூப் சேனல்களில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி பொது அமைதியை குலைக்கும் வகையில் சாதிய வெறுப்பு பேச்சுக்களை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, எஸ்சி-எஸ்டி பாதுகாப்பு குழு முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும், வெறுப்புணர்வை தூண்டும் அனைத்து சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்குமாறும், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் போட்டியிடாத சாதிய கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து சாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்தமனுமீதான விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, மனுகுறித்து, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர், ஆதிதிராவிட நலத்துறை செயலர், டிஜிபி, பதிவுத்துறை தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.