டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டதை எட்டியதை தொடர்ந்து ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இரு தரப்பினருக்கு மாறி மாறி பலரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், இ அதிமுகவில் உட்கட்சி பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ., கட்சியின் நிறுவனரும், தலைவருமான ஜோசப் என்பவர் கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது. ஆனால், மனுதாரர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் கூடுதலாக ரூ.25 ஆயிரம் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
அதுபோல, அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்படி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.