திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இளைஞரணி நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, ரமணா நகர் 3-வது வீதியில் வசிப்பவர் ஆனந்தன் (43). இவர் திருவண்ணாமலை மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவருமான தணிகைவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு உள்ளது.

இந்த நிலையில் ஆனந்தன் வீட்டுக்கு, திருவண்ணாமலை அண்ணா நகர், 8-வது வீதியில் வசிக்கும் பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் அஜித்குமார் (26), திருவண்ணாமலை அடுத்த ஆணாய் பிறந்தான் கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் சதீஷ்குமார் (23), திருவண்ணாமலை தாமரை நகரில் வசிக்கும் பாபு என்கிற சதீஷ்குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவைத் தட்டி ஆனந்தனை வெளியே வரவழைத்துள்ளனர். பின்னர், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், காலி பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பித் தீ வைத்து, வீட்டின் முன்பு வீசியுள்ளனர். அதில், அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வெடித்துச் சிதறவில்லை. இதனால், ஆனந்தன் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

இதுபற்றித் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வெடிக்காமல் இருந்த பாட்டிலைக் கைப்பற்றினர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகரக் காவல்துறையினர் அஜித்குமார், சதீஷ்குமார், பாபு என்கிற சதீஷ்குமார் மற்றும் பாஜக வேட்பாளர் தணிகைவேல் ஆகியோர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகள் மற்றும் வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதில், “கட்சி ரீதியாக ஏற்பட்ட நட்பு காரணமாக தணிகைவேலுக்கு ஆனந்தன் சிறுகச் சிறுக ரூ.28 லட்சம் கடன் கொடுத்துள்ளதாகவும், அந்தப் பணத்தைத் தேர்தலுக்குப் பிறகு கொடுப்பதாகக் கூறியவர் கொடுக்கவில்லை என்றும், பணத்தைத் திருப்பிக் கேட்டதால் விரோதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தணிகைவேல் தனது ஆதரவாளர்கள் மூலம் ஆனந்தனைத் தாக்கி பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை வீசியதாகவும் குடும்பத்துடன் கொலை செய்யாமல் விடமாட்டோம் என மிரட்டியதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஜித்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரைத் தேடி வருகின்றனர். இதேபோல், திருக்கோவிலூரில் பாஜக நிர்வாகியைத் தாக்கி மிரட்டியதாக திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் விஏடி கலிவரதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.