மதுரை:

நாங்குநேரி டைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரம் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த நிலையில், நாங்குனேரி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சங்கரசுப்பிரமணியம் என்பவர், நாங்குனேரி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நாங்குநேரி தொகுதியில் ஆளுங்கட்சியினர் முகாமிட்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும்,  எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் வரிசைப்படி இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதுபோல கடந்த 12ந்தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்தும் புகார் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் சிவஞானம் – தாரணி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது தேர்தலை முறையாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைக்கேற்பவே நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து,  இடைத்தேர்தலை தேர்தலை தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும்  நடத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சுயேச்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.