சென்னை:

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில்  அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமுமுக தலைவர் ஜவஹிருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,  தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  அதனால், கொரோனா சிகிச்சைகளுக்க குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், மேலும் தனியார் மருத்துவமனையில் உள்ள 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்ற அமர்வில் நடைபெற்றது. அப்போது,  மனு தொடர்பாக, எந்தவொரு தனியார் மருத்துவமனைகளும் வழக்கில் சேர்க்கவில்லை எனவும், மனுதாரர் எந்த அரசாணையையும் எதிர்க்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள்,இதே போன்ற வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளதால், இந்த விவகாரத்தில் உயர்நீதி மன்றம் தலையிட முடியாது என கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.